மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிவந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா தற்போது அந்நிறுவனத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக ஸ்டீவ் பால்மருக்கு பதிலாக கடந்த 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போது பில்கேட்ஸ் வகித்து வந்த இயக்குநர் குழு தலைவர் பதவியை ஜான் தாம்சனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதேநேரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் நாதெல்லா செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யா நாதெல்லா பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்:
- சத்யா நாதெல்லா 1967-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 மாதம் ஹைதராபாத்தில் பிறந்தவர்.
- மணிபால் பல்கலைக்கழகத்தில் மின் பொறியாளர் பட்டம் பெற்றார். பின்னர் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
- 1990-ம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டன் (Sun Microsystem) நிறுவனத்தில் தன்னுடைய முதல் பணியைத் தொடங்கினார்.
- 1992-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தார். 2000-ம் ஆண்டு நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.
- 2008- 2011-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவுட் பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட சத்யா நாதெல்லா க்ளவுட் பிரிவின் மூளையாகச் செயல்பட்டார்.
- இந்த காலகட்டத்தில் க்ளவ்ட் சேவை பிரிவின் வருவாளை 1.22 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 1.50 லட்சம் கோடியை மூன்றே ஆண்டுகளில் உயர்த்தி காட்டினார்.
- பின்னர் 2014-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- லிங்கிட் இன், நுவான்ஸ் கம்யூனிகேசன், ஸெனிமாக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களைப் பலநூறுகோடி டாலர்களுக்கு விலைக்கு வாங்கி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக மாற்றினார்.
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது சத்யா நாதெல்லா அந்நிறுவனத்தின் பங்குகளை 7 ஆண்டுகளில் ஐந்து மடங்கு உயர்த்தி காட்டினார்.







