போலீசாருடன் வாக்குவாதம்: பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் மறுப்பு!

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேத்துபட்டில் போலீசாருடன் வழக்கறிஞர் தனுஜா ராஜன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக…

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேத்துபட்டில் போலீசாருடன் வழக்கறிஞர் தனுஜா ராஜன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் வேகமாக பரவியது. போலீசாரை மிரட்டும் வகையில் பேசிய வழக்கறிஞர் தனுஜாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தலைமை காவலர் ரஜித்குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கறிஞர் தனுஜா ராஜன், அவர் மகள் ப்ரீத்தி ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து தாய் தனுஜா, மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அங்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி விசாரித்தார்.

‘வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு மீண்டும் வந்த போது, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன்படி வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். அவர் மகள் பிரீத்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி தண்டபாணி, தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.