முக்கியச் செய்திகள் குற்றம்

போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!

திருச்செந்தூரில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் மது போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிக்கும் அவலத்தை நியூஸ் 7 தமிழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கொரோனா ஊரடங்கால் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர் தங்கி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோயில் சார்பில் தினமும் மதிய வேளையில் அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் மற்றும் ஆன்மிக அன்பவர்கள் மூலம் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு,தேநீர், போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

உணவு தேவைக்கு உதவினாலும் குடிப்பழக்கத்திற்கு ஆளான சிலர், மது பழக்கத்திற்கு மாற்று வழிதேடி அலைகின்றனர். திருச்செந்தூரில் சில தினங்களுக்கு முன்பு தண்ணீரில் சானிடைசரை கலந்து குடித்த செங்கோட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் உயிரிழந்தார். அதேபோல் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் சானிடைசரை குடித்து பலியானார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூரில் மது போதைக்காக சானிடைசரை தண்ணீரில் கலந்து குடிக்கும் அவலத்தை நியூஸ் 7 தமிழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

திருச்செந்தூரில் தங்கி இருக்கும் ஆதரவற்ற முதியவர்கள், கைகளைச் சுத்தம் செய்வதற்காக மருந்தகங்களில் விற்கப்படும் சானிடைசர்களை வாங்கி வந்து அவற்றை போதைக்கு பயன்படுத்துவது தெரியவந்தது. மது போதைக்கு மாற்றாக சானிடைசர் இருப்பதாக அதனை அருந்தியவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு போதையின் பிடியில் சிக்கிய ஆதரவற்ற முதியவர்களின் அவநிலையைப் படம்பிடித்த நியூஸ் 7 தமிழ், இதனை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றது.

இதனைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் உறுதி அளித்தார். அதுமட்டுமின்றி, ஆதரவற்ற முதியவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி அளித்துள்ளார்.

திருச்செந்தூரில் சுற்றித் திரியும் ஆதரவற்ற முதியவர்களின் அவல நிலைக்கு தீர்வு காணும் வகையில், அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைத்து உணவு வழங்கி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது தான் இது போன்ற சம்பவங்களும், உயிரிழப்புகளும் முடிவுக்கு வரும் என்றும் சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

நியூஸ் 7 தமிழுக்காக ஐக்கோட் மற்றும் சுடலைக்குமார், தூத்துக்குடி.

Advertisement:

Related posts

12 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

Karthick

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

உலகளவில் முடங்கிய ட்விட்டர் இணையதளம்!

எல்.ரேணுகாதேவி