’ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது’

ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய  5 மண்டலங்களில் மாநகராட்சி நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளை தனியாரிடம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வேலை இழப்பு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தனியாருக்கு விடக்கூடாது என்றும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அம்மண்டலங்களின் தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி தொடங்கபட்ட இந்த போராட்டம் 13வது நாளாக தொடர்ந்து வந்தது. அரசியல் கட்சியினர், மாணவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரின் இடையே இப்போராட்டம் ஆதரவு
பெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ரிப்பன் மாளிகைக்கு வெளியே நடைபாதையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளர்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று நள்ளிரவு  போலீசார் தூய்மை பணியாளர்களை கைது செய்தனர். காவலர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை துப்புரவு பணியாளர்களின் கைகளில் இந்திய தேசியகொடிகளி ஏந்தி முழுக்கங்கள் எழுப்பினர். நள்ளிரவில் பெண்கள் என்றும் பாராமல் குண்டு கட்டாக போலீசார் கைது செய்து பேருந்துகளிலும், காவல்துறை வானங்களிலும் ஏற்றினர். போலீசார் கைது நடவடிக்கையால் அங்கு பரபரப்பு நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.