சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றார்.
துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார். இந்நிலையில், துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் முதல் சுற்றில் ரஷ்யாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா இணையை, சானியா மற்றும் கீஸ் இணை எதிர்கொண்டது. இதில், 4-6 0-6 என்ற கணக்கில் சானியா இணை வெற்றி வாய்ப்பை இழந்தது. இதன் மூலம், சானியாவின் 20 ஆண்டு கால டென்னிஸ் பயணம் நிறைவுபெற்றது.
சானியா மகளிர் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்ஸ்லாம் பட்டங்களையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். இரட்டையர் பிரிவில் 43 முறை சாம்பியன் பட்டங்களை கைப்பற்றிய சானியா மிர்சா, விம்பிள்டன், அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் பட்டங்களையும் வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும் ஒற்றையர் தரவரிசையில் 27-வது இடத்தைப் பிடித்தார்.
டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான்களான செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோரிடம் சானியா ஒற்றையர் போட்டிகளில் தோற்றாலும், அமெரிக்க சகோதரிகளுக்கு எதிராக அவர் களமிறங்கியபோது மிக ஆரோக்கியமான விளையாட்டை வெளிப்படுத்தி பல வெற்றிகளை பெற்றுள்ளார்.
இரட்டையர் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த ஒரே இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்ற சானியா மிர்சா, கர்ப்பமாக இருந்தபோது ஒரு வருடத்திற்கும் மேலாக விடுமுறை எடுத்து, ஆண் குழந்தை பிறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சிக்குத் திரும்பினார். அப்போது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த என்னை போன்ற தாய்மார்களின் கனவுகளைத் தொடர ஊக்கமளித்தால், தனது வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்ற முடியும் என்று கூறி மீண்டும் தொடர்களில் விளையாட ஆரம்பித்தார்.
இந்த நிலையில் 36 வயதான சானியா மிர்சா ஓய்வை அறிவித்தது முதல், தெற்காசியாவைச் சேர்ந்த பல பெண் விளையாட்டு வீரர்கள், பெண்கள், தொழில்முறை விளையாட்டுகளில் அடியெடுத்து வைப்பதற்கு உந்துதலாக இருந்ததாக கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தனது ஓய்வு குறித்து பேசியுள்ள சானியா மிர்சா, பல “இளம் பெண்களின் வாழ்க்கையில், குறிப்பாக துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என்பதை கேள்விப்படும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது”. “என்னைப் பொறுத்தவரை, டென்னிஸ் எப்போதும் என் வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான பகுதியாக இருக்கப் போகிறது. ஆனால் அது என் முழு வாழ்க்கை இல்லை. இப்போது என் மகனுடன் என்னால் நிறைய நேரங்களை செலவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா











