சிவசேனா விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன்பக்கம் இருப்பதால், தனது அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.
இதையும் படியுங்கள் : டோக்கியோவில் இனிக்கும் தமிழ் – ஜப்பான் தம்பதியின் வியக்கவைக்கும் தமிழ்ப்பற்று!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் பெயரையும் வில், அம்பு சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 20ம் தேதி மனுத்தாக்கல் செய்தது. மேலும் இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்ரே தரப்பு முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த வழக்கு, அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே மும்பையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.