அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக ஆளுநரை சந்தித்து இபிஎஸ், ஓபிஎஸ் புகார் அளித்துள்ளனர்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடநாடு கொலை ,கொள்ளை வழக்கில் அதிமுக மீது பொய் வழக்கு போடுவதாக மனு அளித்தனர். சந்திப்பில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி ,வேலுமணி, ஜெயக்குமார், அதிமுக சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உடனிருந்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அனைத்து துறை செயல்பாடுகளிலும் தோல்வி அடைந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்து எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறது. திமுக அரசின் 100 நாள் சாதனை என்பது வசூல் செய்ததுதான் எனக் குறிப்பிட்டார்.
எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வேண்டுமென்றே வழக்கு போட்டுள்ளனர் என்ற அவர், திமுகவின் 100 நாள் ஆட்சியில் மக்கள் வேதனையும், சோதனையும் தான் அடைந்துள்ளனர் என்றும், அதிமுக ஆட்சியில் துவங்கிய திட்டங்கள் வேண்டும் என்றே முடக்கி உள்ளனர் எனவும் குற்றம்சாட்டினார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை முடிவடைய இருக்கும் நிலையில் இருக்கு வழக்கை மீண்டு விசாரிக்கின்றனர் என்றும், திமுக தேர்தல் அறிக்கைக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் பழனிசாமி கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நேரடியாக அதிமுகவை சந்திக்க முடியாமல் குறுக்கு வழியில் இந்த வழக்கை திசை திருப்ப பார்க்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.







