தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. அதன்படி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்ந்த் பெல்வேறு அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது, “
கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு ரூ.2 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சி கள்ள மதுபானம் விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.
கள்ளச்சாராயம், போலி / கலப்பட மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக ரூ.2 கோடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 30 ஆயிரத்து 284 ரூபாய், உதவி விற்பனையாளர்களுக்கு 28 ஆயிரத்து 689 ரூபாய் என உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும். டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி ஒதுக்கீடு, மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்தில் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
மெத்தனால் கட்டுப்பாடு மற்றும் போலி மதுபானம் /கள்ளச்சாராயத் தயாரிப்புக்காக மெத்தனால் மற்றும் மெத்தனால் சார்ந்த மூலப்பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்துவது மற்றும் திசை திருப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படும்.
உரிமம் ரத்து, ஒப்படைப்பு, மாற்றம் உள்ளிட்ட பணிகளை வெளிப்படையாக மேற்கொள்ள ‘e-Kalaal’ தளத்தில் புதிய தொகுதிகள் உருவாக்கப்படும். மேலும், FL2, FL3, FL3A, FL3AA உரிமம் புதுப்பித்தல் மற்றும் மதுபான இறக்குமதி,பீர் ஏற்றுமதி அனுமதிக்கான செயலிகள் ‘e-Kalaal’ தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக மின்னணுமயமாக்கப்படும். இதற்காக ரூ.1.69 கோடி ஒதுக்கப்படும்” ஆகிய திட்டங்களை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.




