நேபாளத் தூதரகத்திற்கு நேரில் சென்ற ராஜ்நாத் சிங் – இரங்கல் புத்தகத்தில் கையெழுத்து!

புதுடெல்லியில் உள்ள நேபாளத் தூதரகத்திற்கு நேரில் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், டெல்லியில் உள்ள நேபாளத் தூதரகத்திற்கு இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் இந்திய அரசு மற்றும் மக்களின் சார்பில் அவர் கையொப்பமிட்டார்.

இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங் , ‘இந்தத் துயரமான இயற்கை பேரிடரால் இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டினரும் நேபாள மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘சுக துக்கங்களில் தோள் கொடுக்கும் உண்மையான தோழனாக இந்தியா எப்போதும் நேபாளத்துடன் நின்றுள்ளது. இந்த இக்கட்டான நேரத்திலும் எங்களது நேபாளத்தின் சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நின்று தேடல், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கு முழு ஆதரவளிக்க இந்தியா உறுதியளிக்கிறது’ என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.