சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதையான ‘காலா பாணி’ எனும் வரலாற்று புதினத்துக்காக, சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் மு.ராஜேந்திரனுக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும் எனவும் குறிப்பிட்டு, அவர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
'காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை' எனும் வரலாற்றுப் புதினத்துக்காக @sahityaakademi விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. மு. ராஜேந்திரன் IAS (ஓய்வு) அவர்களுக்கு என் பாராட்டுகள்.
இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும்! pic.twitter.com/b0A2HlGhPh
— M.K.Stalin (@mkstalin) December 22, 2022
காளையார் கோவில் போரைப் பற்றி இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிந்திடும் வகையில் காலா பாணி நாவல் அமைந்திருப்பது மிகவும் பெருமைக்குரியது என தெரிவித்துள்ள வி.கே.சசிகலா, எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் பண்டைய வரலாற்று சிறப்புகளை அனைவரும் அறிந்திடும் வகையில் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை மு.ராஜேந்திரன் அளித்திட வேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், எழுத்தாளருமான முனைவர் மு.ராஜேந்திரன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 22, 2022
எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச்செயலாலர் டிடிவி தினகரன், வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, சிறந்த நூல்களைப் படைத்துவரும் அவரது பணி சிறக்கட்டும் என்றும், தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பல நூல்களை மு.ராஜேந்திரன் படைக்கட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.







