சபரிமலை ஐயப்பன் கோவிலில் நான்காவது தேசிய பேரிடர் மீட்பு படையினர் (04Th BN NDRF) 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெகுவிமரிசையாக மண்டல பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சபரிமலையில் தரிசனத்திற்காக 87 ஆயிரத்து 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதுவரை 7 லட்சம் பக்தர்களுக்கு மேல் சபரிமலையில் ஐயப்பனை தரிசித்துள்ளனர். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 24 ,மணி நேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் அணித்தலைவர் சுரேஷ் தலைமையில், இரண்டு அணிகள், சபரிமலைக் கோவில் நடை திறந்த நாள் முதல் உள்ளனர். மேலும் இவர்கள் மகர விளக்கு ஜோதி வரை, அதாவது ஜனவரி 20ஆம் தேதி வரை பேரிடர் மீட்புக்காக 24 மணி நேரமும் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் இ எம் எஸ் எனப்படும் முதல் உதவி சிகிச்சைக்காக சன்னிதானம், நடப்பந்தல் மற்றும் பாண்டி தாவளம், புல் மேடு பகுதியில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை இரவு நேரம் அல்லது பகல் நேரத்தில் 24*7 நேரமும் பணியில் உள்ள குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இதில் மயக்கம் அடைந்த ஐயப்ப பக்தர்களை கேரளா அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பது, முதல் உதவி செய்வது ஆகிய பணிகளை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் ”புண்ணியம் பூங்காவனம்” ஆகிய தூய்மைப்படுத்தும் பணிகளிலும் தேசிய பேரிடர் மீட்பு படையானது செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டினை மையமாகக் கொண்ட இந்த அரக்கோணம் குழு கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, காரைக்கால், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு, ஆகிய இடங்களிலும் பணியாற்றி வருகிறது. இந்நிலையில் சபரிமலையிலும் வருடம் தோறும் நான்காவது தேசிய பேரிடர் மீட்பு படையினர் (04Th BN NDRF) பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
– பரசுராமன்.ப











