ரஷ்யா – உக்ரைன் போர்: இரு நாடுகளும் குற்றச்சாட்டு

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், ரஷ்யாவுக்கும் நேட்டோ-வுக்கும் இடையே மோதலை…

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், ரஷ்யாவுக்கும் நேட்டோ-வுக்கும் இடையே மோதலை தூண்டிவிட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முயல்வதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், உக்ரைனின் கார்கிவ் நகரிலிருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்கவும், பாதுகாப்பாக வெளியேற்றவும் ரஷ்யா தயார் என தெரிவித்துள்ளது. ஆனால், மாணவர்களை வெளியேற்ற உக்ரைன் ராணுவம் தடையாக இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே, ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்தாததன் காரணமாக மக்களை வெளியேற்றும் பணிகள் கைவிடப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மவுரிபோல் நகரில் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ரஷ்ய படைகள் ஒத்துழைக்கவில்லை என உகரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் அந்நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணி கைவிடப்படுவதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 10-வது நாளாக இன்று போர் தொடுத்த நிலையில், பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், பொருளாதார தடைகள் விதித்தாலும் தனிமைப்படுத்த முடியாத அளவுக்கு ரஷ்யா பெரிய நாடு என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து பல்வேறு நாடுகள் பொருளாதார கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே உக்ரைன் சுமி நகரில் உள்ள இந்தியர்கள் அவசியம் இன்றி வெளியில் வரவேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், சுமி நகரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், துப்பாக்கிச்சூட்டை நிறுத்துமாறு ரஷ்ய- உக்ரைன் அரசுகளை வலியுறுத்தியுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே கீவ் நகரத்தின் அருகே இன்று காலை ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. ரஷ்ய ராணுவத்தின் MI-35 ரக ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவத்தினர் வீழ்த்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரஷ்ய ஹெலிகாப்டர் முழுவதும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.