உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குல் – 8 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.

இந்த போரில், முக்கிய நகரங்களின் மீது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா இடையே சுமார் 1,395 நாட்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

அதேநேரம், போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் ஒடிசா நகர் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஒடிசா நகரில் உள்ள துறைமுகம், துறைமுகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.