உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்துவரும் போரில், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர் ரஷ்யாவின் “ஸ்பெட்ஸ்நாஸ்” சிறப்பு கமாண்டோக்கள்.
4 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உக்ரைனில், வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி என மும்முனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது ரஷ்ய ராணுவம். இதில் உக்ரைன் தலைநகர் கீவ்விற்குள், தரைவழியாக முதலில் நுழைந்தவர்கள், ரஷ்யாவின் அதிநவீன சிறப்பு ராணுவப் பிரிவான ஸ்பெட்ஸ்நாஸ்தான். ரஷ்யாவின் ராணுவப் புலனாய்வு அமைப்பான ஜிஆர்யு-வின் பிரத்யேக கமாண்டோ பிரிவான ஸ்பெட்ஸ்நாஸ், தற்போது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்யாவின் இந்த சிறப்பு ஸ்பெட்ஸ்நாஸ் படை, மன்னர் ஜார் இரண்டாம் நிக்கோலஸ் காலகட்டத்தில், முதல் உலகப்போரின்போது உருவாக்கப்பட்டது. அப்போது, 8வது பின்லாந்து படைப்பிரிவில் பணியாற்றிவந்த, லெப்டினன்ட் லியோனிட் புனின் யோசனையில் உதித்ததுதான் ஸ்பெட்ஸ்நாஸ் எனும் சிறப்பு ராணுவ பிரிவு.
லெப்டினன்ட் லியோனிட் புனின், ரஷ்யாவில் இன்றளவும் சிறந்த ராணுவ தலைவராக போற்றப்படுபவர். இவரின் படைப்பிரிவில் இருந்த 300 ராணுவ வீரர்கள், எதிரிகளின் இலக்கை எளிதாக தாக்ககூடியவர்கள். குறிப்பாக உளவாளிகளாக ஊடுறுவி எதிரி நாட்டின் ராணுவ திட்டங்களைக் கண்டுபிடிப்பது, அவர்களின் ரகசிய ஆவணங்களைப் பெறுவது உள்ளிட்டவற்றில் கைதேர்ந்தவர்கள். இந்த ஸ்பெட்ஸ்நாஸ் பிரிவினர்தான், பின்னாளில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியில் முக்கியபங்கு வகித்தனர்.
தொடர்ந்து 2-ஆம் உலகப்போரிலும் ஸ்பெட்ஸ்நாஸ் படையினர் சிறப்பாக செயல்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1979-ல் ஆப்கானிஸ்தான் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக, நடந்த உள்நாட்டு போரிலும், ஸ்பெட்ஸ்நாஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
உலக ராணுவத்தினரை அச்சம் கொள்ளச் செய்யும், ரஷ்யாவின் ஸ்பெட்ஸ்நாஸ் படைப்பிரிவில் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். ஸ்பெட்ஸ்நாஸில் வேகா மற்றும் டார்ச் என்று அழைக்கப்படும் கிளைபிரிவுகளும் உண்டு. இவர்கள் அணுசக்தி சம்பவங்களை கையாளுவதிலும், பணயக் கைதிகளை சூழ்நிலையை கையாளுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். ரஷ்யாவின் உயரடுக்குப் படை என்பதால், ஸ்பெட்ஸ்நாஸில் தேர்வுமுறை கடினமானது.
ஸ்பெட்ஸ்நாஸ் சிப்பாய் ஆவதற்கான பயிற்சி மட்டும் ஐந்து ஆண்டுகள்.. அதுமட்டுமல்லாது ஸ்பெட்ஸ்நாஸில் இணையும் நடைமுறை கடினமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய ராணுவத்தின் கேடயமாக உள்ள ஸ்பெட்ஸ்நாஸின் பிடியில் இருந்து உக்ரைன் விரைவில் விடைபெறுமா என்பதை, போர்களம்தான் முடிவுச் செய்யும்.
- எழுத்து: எல்.ரேணுகாதேவி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








