டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு; பாதிப்புகள் என்னென்ன?

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது? இதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம். கடந்த ஒரு வாரமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய…

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது? இதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

கடந்த ஒரு வாரமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. இந்திய ரூபாயின் தொடர் சரிவுக்கான காரணத்தை ஆராய்ந்தால் உள்நாட்டில் 31 ஆண்டுகளில் இல்லாத உச்சகட்ட அளவாக, கடந்த மே மாதத்தில் மொத்த விலை குறியீட்டு எண் 15.9% ஆக உள்ளது. மேலும், இந்திய சந்தையில் இருந்து அதிகளவில் வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் போன்றவையும் காரணமாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் எரிபொருள், உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கமும், 40 வருட உச்சத்தை தொட்டு 8.6 சதவீதமாக உள்ளது. 1981 ம் ஆண்டு டிசம்பருக்கு பின் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்த நிகழ்வு இது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அங்கு மே மாதத்தில் எரிபொருள் விலை சுமார் 34.6% உயர்ந்துள்ளது.

எந்த நாடாக இருந்தாலும் பணவீக்கம் உயர்ந்தால் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியின் வேகம் பாதிப்பை எதிர்கொள்ளும். இதைத் கட்டுக்குள்ள வைக்க ,மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை மாற்றி, பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல் ஜப்பானின் யென், சீனாவின் யுவான் போன்ற முக்கிய நாணயங்களின் சரிவுக்கும், முக்கியமான காரணம் அமெரிக்காவின் மே மாத பணவீக்கம் தான் காரணம் என கூறப்படுகிறது. அண்மையில் வெளியான அமெரிக்கப் பணவீக்க தரவுகள், சர்வதேச முதலீட்டு சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.

ரூபாய் மதிப்பு சரியும் பட்சத்தில் இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிக்கும், இதனால் கச்சா எண்ணெய் தொடங்கி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வரை விலை அதிகரிக்கும். இதன் தாக்கம் நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையை அதிகரிக்க செய்யும்.

– தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.