பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், பல்வேறு செயல்பாடுகளுக்கு மாநிலம் முழுவதும் கல்வி அலுவலர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவும், துறை சார்ந்த சர்வே, திட்டங்களை செயல்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்ற இளைஞர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை ( TN Education Fellowship ) திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
சீனியர், ஜூனியர் என்று இரண்டு பிரிவுகளில் தலா 38, 114 பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் https://tnschools.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வாகும் ஜூனியர்களுக்கு மாதம் ரூ.32,000, சீனியர்களுக்கு மாதம் ரூ.45,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் 2024 வரை இரண்டு ஆண்டு காலத்துக்கு தற்காலிக அடிப்படையிலேயே பணி அமையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.








