கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருவதாகவும் இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என நிபுணர்கள் கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, தடுப்பூசிகள் இல்லை, ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம் எனக் கூறியுள்ளார்.
பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் கொரோனா தொற்று காட்டுத் தீயாகப் பரவி வருவதாகவும் இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சம் பரவலாக நீடிக்கிறது எனக் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவை தெளிவான திட்டத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.







