ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்திடுக.. – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது…

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது இந்து அமைப்பினர் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஆஸ்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது.

 

மேலும் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையிலேயே அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அக்டோபர் 2-ம் தேதிக்கு பதில் மாற்று தேதி அறிவித்து ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பி.எப்.ஐ. தடை செய்யப்பட்ட போதும் கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் கடைசி நேரத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் தரப்பினர் தெரிவித்தனர். அதேநேரத்தில், மத்திய- மாநில உளவு அமைப்புகளின் எச்சரிக்கையை அடுத்து அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் அனுமதி வழங்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் இந்த வழக்கை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.