அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களை நீக்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள் 205 பேரும் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், நவம்பர் மாதம் முதல் அவர்கள் பணிக்கு வரக்கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 12 ஆண்டுகளாக உழைத்தவர்களை மனிதநேயமின்றி பல்கலைக்கழகம் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகவும், அக்டோபர் 31ஆம் தேதியுடன் அவர்களின் பணிக்காலம் முடிவடைவதாகவும் துணைவேந்தர் முனைவர் கதிரேசன் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மனிதநேயமற்றது என்பது மட்டுமின்றி, தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. இதை ஏற்கவே முடியாது. இம்முடிவை திரும்பப்பெற வேண்டும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியர்கள் கோரியது பணி நிலைப்பும், காலமுறை ஊதிய நிர்ணயமும்தான். அதற்காக அவர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அவர்களின் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார். அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தமிழக சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கையை பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கப்படமாட்டார்கள் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். ஆனால், உயர்கல்வி அமைச்சரின் வாக்குறுதியை பொருட்படுத்தாமல், 205 தற்காலிக ஊழியர்களையும்
பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வாறு பணி நீக்கம் செய்ய முடியும்?. அமைச்சரின் வாக்குறுதியையும் மீறி, தற்காலிக பணியாளர்களை பணி நீக்குவதற்காக தீர்மானத்தை ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு யார் கொடுத்தது?. தற்காலிக ஊழியர்களை எதிரிகளைப்போல நினைத்துக் கொண்டு அவர்களை பணிநீக்க பல்கலை. நிர்வாகம் துடிப்பது ஏன்?.
அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் சலுகை கேட்கவில்லை… தங்களின் உரிமையைத் தான் கேட்கிறார்கள்.
தொகுப்பூதியர்களாக பணியாற்றி வரும் அனைவரும், அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியை பெற்றவர்கள் ஆவர். இவர்களின் நியமனம் முழுவதும் விதிகளின்படியும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதலுடனும் தான் செய்யப்பட்டுள்ளது. பணி நிலைப்பு செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்ட தொகுப்பூதியர்களை பணி நிலைப்பு செய்வதற்கு பதிலாக, அவர்களை பணியில்
இருந்து நீக்குவதை அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கு முற்றிலும் மாறாக தொகுப்பூதிய பணியாளர்களை பணிநீக்கக் கூடாது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 205 தொகுப்பூதிய பணியாளர்களையும் உடனடியாக
பணி நிலைப்பு செய்ய அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.