முக்கியச் செய்திகள் தமிழகம்

4 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.4000 ஒப்படைப்பு; கூலி தொழிலாளியின் வியக்கவைக்கும் நேர்மை

கூலித் தொழிலாளி ஒருவர் கீழே கிடந்த மணி பர்ஸில் இருந்த ரூ.4000 பணத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்
கூலித் தொழிலாளியான சீனிவாசன். இவரது தாய் கமலம், கடந்த 2018ஆம் ஆண்டு தனது நிலத்திற்கு சென்ற பொழுது வழியில் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து வந்து தனது மகன் சீனிவாசனிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த சீனிவாசன் பர்ஸுக்குள் 4 ஆயிரம் ரூபாய் பணமும், வள்ளலார் படம் ஒன்றும் இருப்பதைக் கண்டுள்ளார். அப்பொழுது இதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உள்மனது கூறியதை அடுத்து, அந்த மணி பர்ஸை தனது வீட்டின் ஓரிடத்தில் வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சீனிவாசன் சென்றுள்ளார். அங்கு அறிமுகம் இல்லாத ஒருவரைச் சந்தித்து, அவரிடம், நீங்கள் வள்ளலார் சாமியை கும்பிடுவீர்களா? இதற்கு முன் எப்பொழுதாவது இங்கு வந்துள்ளீர்களா? என்று சீனிவாசன் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், நான் இங்குதான் திருமணம் செய்துள்ளேன். அதனால் அடிக்கடி வருவேன் என கூறியுள்ளார். தொடர்ந்து, நீங்கள் ஏதாவது தவற விட்டீர்களா என கேட்ட பொழுது, 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மணி பர்ஸ் காணாமல் போனதைப் பற்றி அந்த நபர் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீனிவாசன் அவரிடம் தாங்கள் எந்த ஊர் என்று கேட்ட பொழுது, அவர் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் செந்தில் முருகன் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து சீனிவாசன், தங்களுடைய மணி பர்ஸ் என்னிடம்தான் உள்ளது, அதனைத் தேடி எடுத்து வைக்கின்றேன். உங்களது மொபைல் நம்பரை கூறுங்கள் என கேட்டு வாங்கிக்கொண்டு செந்தில் முருகனை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த சீனிவாசன், மணி பர்ஸை தேடி எடுத்து, செந்தில் முருகனை தொடர்பு கொண்டு நேரில் வந்து பர்ஸை ஒப்படைப்பதாக கூறியுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் சென்ற சீனிவாசன் செந்தில் முருகனின் வீட்டிற்கே சென்று மணி பர்ஸையும், அதிலிருந்த ரூ.3904 பணத்தையும் ஒப்படைத்துள்ளார்.

இந்த செய்தி கவரப்பாளையம் கிராம மக்களிடையே பரவியதை அடுத்து, கிராம மக்கள் சீனிவாசனின் வீட்டிற்குச் சென்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருந்த பணத்தை அப்படியே உரியவரிடம் ஒப்படைத்தது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

இது குறித்து சீனிவாசன் கூறுகையில், தான் வெளிநாட்டில் இருந்தபோது குரான் படித்துள்ளதாகவும் அதில் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல், கீழே கிடக்கும் பொருளை உரியவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், அதனை தன் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தனது உள்மனம் ஒவ்வொரு முறையும் தனக்கு பல்வேறு விஷயங்களை கட்டளையிடும் என்றும் அந்த கட்டளையின்படியே தான் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். கூலித் தொழிலாளியான சீனிவாசனின் நேர்மை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

– ஜெனி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாநிலங்களுக்கு அதிகாரம்: கேரளாவில் முழங்கிய முதலமைச்சர்

EZHILARASAN D

”நாங்கள் ஏன் கொள்கைகளை மாற்ற வேண்டும்?”- மத்திய அரசுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி

Web Editor

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

Arivazhagan Chinnasamy