95% பணிகள் முடிந்த மதுரை எய்ம்ஸ் எங்கே? தேடிச் சென்ற எம்பிக்கள்

மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவிகிதம் முடிவுற்றதாக நட்டா கூறிய நிலையில், எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை எம்.பி.க்கள் பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக் கூட்டம்…

மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவிகிதம் முடிவுற்றதாக நட்டா கூறிய நிலையில், எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை எம்.பி.க்கள் பார்வையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசியத் தலைவர் அப்போது ஜெ.பி.நட்டா தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பூர்வாங்கப் பணிகள் முடிவுற்றதாகவும், விரைவில் மோடி அதனை திறந்து வைப்பார் எனவும் பேசினார்.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மதுரை எம்.பி சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் இன்று திடீரென பார்வையிட்டனர். அப்பகுதி முழுவதும் நடந்த சென்ற அவர்கள், “95 சதவிகிதம் பணிகள் முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?” என எழுதப்பட்ட பதாகையை ஏந்தி நின்றனர்.
இதுகுறித்து காணொலி காட்சியில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “எய்ம்ஸ் மருத்துவனையின் 95 சதவீதம் பணிகள் முடிவுற்றதாக ஜெ.பி.நட்டா கூறியதைத் தொடர்ந்து அதனைத் தேடி வந்தோம் ஆனால் இங்கு எதையும் காணோம்” எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகிதம் கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நானும் எம்பி மாணிக்கம் தாகூரும் சென்றோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலைப் போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்” எனப் பதிவிட்டிருந்தார்.

அதோடு உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம் எனவும் பதிவிட்டிருந்தார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.