உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை நேரில் சென்று கொடுத்தார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில தினங்களாக போர்…

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை நேரில் சென்று கொடுத்தார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில தினங்களாக போர் நடந்துவருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து 14.5 லட்சம் பேர் இதுவரை வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. நடந்துவரும் இந்த போரில் இந்தியா உட்பட பல்வேறு நாட்டு மக்கள் மற்றும் மாணவர்கள் சிக்கியுள்ளனர். அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் கார்கிவ் பகுதியில் கடந்த 1ம் தேதி நடந்துகொண்டிருந்த போரின்போது கர்நாடகாவை சேர்ந்த 21வயது இளைஞர் நவீன் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவமானது இந்தியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்காக பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இது தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நவீன் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதோடு ரூ.25 லட்சத்திற்கான காசோலையை நவீன் குடும்பத்திற்கு கொடுத்தார். இது தொடர்ந்து அவர் பேசியதாவது, ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை நவீன் குடும்பத்தினரிடம் வழங்கினேன். அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும். நவீன் உடல் முடிந்தவரை விரைந்து இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகத்துடன் எப்போதும் தொடர்பில் இருப்போம்” என்று பேசினார்.

இது தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டதாவது, “நவீன் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களை சந்தித்த போது நவீனுக்கு அஞ்சலி செலுத்தினேன். நவீனின் இழப்பு ஈடுகட்ட முடியாதது. இந்த துயரத்தில் அவர் குடும்பத்துடன் நானும் பங்குகொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.