தொலைக்காட்சியில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார். இதை முன்னிட்டு, ரஷ்யா டுடே என்ற ரஷ்ய அரசு செய்தித் தொலைக்காட்சிக்கு அவர் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில், காஷ்மீர் உள்பட இந்தியாவுடனான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துணைக்கண்டத்தில் வசிக்கும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டதாக இந்த விவாதம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், தான் பார்த்தஇந்தியா தற்போது இல்லை என்றும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தால் இந்தியா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காத வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.







