சென்னை அம்பத்தூர் அருகே, முறையற்ற உறவு காரணமாக போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர், வீடியோ வெளியிட்டுவிட்டு, உயிரை மாய்த்துக் கொண்டார்.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கிருஷ்ணகுமார், பாடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். இதற்கிடையில், பெண் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும், கிருஷ்ணகுமாருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பெண் உதவி ஆய்வாளரின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற கிருஷ்ணகுமார், அங்கு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. புகாரின்பேரில், நொளம்பூர் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், பாடியில் உள்ள தமது வீட்டிற்கு சென்ற கிருஷ்ணகுமார், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உயிரிழப்புக்கு முன் அவர் பேசி பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள வீடியோவில், தமது உயிரிழப்புக்கு காரணம் பெண் உதவி ஆய்வாளர்தான் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூர் அருகே, முறையற்ற உறவு காரணமாக போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர், வீடியோ வெளியிட்டுவிட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








