மதுரையில் சமூகவலைதலங்களின் மூலமாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த ரவுடி பீடி பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து தல்லாகுளம் காவல்துறையினர் கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிப்பாளையம் அருகே ஜம்புராபுரம் மார்க்கெட் பகுதியில் பைக்கில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது இருவரிடமும் இருந்து கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் விசாரித்த போது முன்னாள் சொமோட்டோ ஊழியரும், ரவுடியுமான மதுரை ரேஸ் கோர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த பீடி பாலா என்பவரும், எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற நபரும் சேர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
கல்லூரி மாணவர்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை எடுத்துச் செல்கின்ற போது முன்னாள் சொமோட்டோ ஊழியராக இருந்த பீடி பாலா சொமோட்டோ நிறுவனத்தின் சீருடை அணிந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரையில் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய பிரபல ரவுடி ஒருவர் சொமோட்டோ சீருடையை அணிந்து கொண்டு வலைத்தலங்களின் கஞ்சா விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







