பழனி மலை முருகன் கோயிலில், பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று வர மின்இழுவை ரயிலுக்கு பதிலாக ரோப் கார் சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரை உபயோகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ரோப்காா் சேவை ஒரு சில நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் தினமும் பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது. அதன்படி, பழனி மலையில் செயல்பட்டு வரும் ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி ரோப்கார் சேவை நாளை ஒருநாள் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.







