வீட்டின் கதவை உடைத்து, நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் செல்ல பீரோவையும் உடைத்த கொள்ளையனுக்கு விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்காததால் ஆத்திரத்தில் வீட்டையே சூறையாடிச் சென்ற சம்பவம் பொது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம். ஒற்றையால் விளையைச் சேர்ந்தவர் ராஜன். இவர் இந்திய ராணுவத்தில் பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் பணியாற்றி வருகிறார். குடும்பத்தோடும், பஞ்சாபில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வருவதால், ஒற்றையால் விலையில் உள்ள சொந்த வீட்டைப் பூட்டி வைத்திருந்தார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, வரும் போது, வீட்டைப் பயன்படுத்திக்கொள்வார்.
வீட்டின் அருகே வசித்து வரும், ராஜனின் தாயார் மட்டும் தினமும் காலையில் வீட்டிற்கு வந்து, சுத்தம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம். இதே போல சம்பவத்தன்று, காலையில் மகனின் வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்புற கதவு உடைந்து கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, போர்க்களத்தைப் போல விட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும், சிதறிக்கிடந்தது.
படுக்கையறையிலிருந்த, பீரோக்களும் உடைந்து கிடந்தது. இது குறித்து, கன்னியாகுமரி போலிசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த போது, பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்ததால் நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டதா என ராணுவ வீரன் ராஜனிடம் போலிசார் தொடர்பு கொண்டு, விசாரித்தபோது, நகை பணம் எதுவும் பீரோவில் வைத்துச் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ளார் ராஜன்.
இதன் பிறகுதான் போலிசாருக்கு, வீட்டைக் கொள்ளையர்கள் என்ன காரணத்தால் சூறையாடினர் என்பது தெளிவானது. கதவை உடைத்து பீரோக்களை உடைத்த கொள்ளையர்கள், அதிகப் பணம், நகைகள் இருக்கும் என நம்பிதான் கொள்ளையடிக்க நுழைந்துள்ளார். ஆனால், எந்த ஒரு விலையுயர்ந்த, பொருட்களோ, நகைகளோ பீரோவில் இல்லாததால், ஆத்திரம் அடைந்து மற்ற பொருட்களை உடைத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் யார் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலமும், கைரேகை மூலமும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை சம்பவங்கள் பலவிதம், கொள்ளையர்களும் பலவிதம் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களுக்கு நகைகள் கிடைக்காத ஆத்திரத்தில், வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடிய சம்பவம் இப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.








