மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்; 18 அமைச்சர்கள் பதவியேற்பு

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.  மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி அடைந்ததை தொடர்ந்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன்…

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொண்டனர். 

மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி அடைந்ததை தொடர்ந்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், உத்தவ் தாக்கரேவின் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்காமலேயே உத்தவ் தாக்கரே பதவி விலகினார்.

தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க. கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தார். ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30-ந்தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

முதற்கட்டமாக பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேர், சிவசேனாவை சேர்ந்த 9 பேர் என மொத்தம் 18 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களில் பா.ஜ.க.வை சேர்ந்த மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதீர் முங்கந்திவார், சுரேஷ் காடே, கிரீஷ் மகாஜன், ரவீந்திர சவான், மங்கள் பிரபாத் லோதா, விஜய்குமார் கவித் மற்றும் அதுல் சவே ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோன்று சிவசேனாவை சேர்ந்த தாதா பூசே, ஷம்புராஜே தேசாய், சந்தீபன் பும்ரே, உதய் சமந்த், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல் மற்றும் சஞ்சய் ரதாவுட் ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இன்று முதல், அவர்கள் முழுக்க முழுக்க வேலை செய்வார்கள் மற்றும் அந்தந்த துறைகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். இது ஒரு சிறிய அமைச்சரவை, மீதமுள்ள அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டு விரைவில் பதவியேற்பார்கள் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.