‘2024-ல் தமிழ்நாடு முதலமைச்சர் அடையாளம் காட்டும் நபர்தான் பிரதமர்’ – திண்டுக்கல் ஐ.லியோனி

2024-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டும் நபர்தான் இந்தியாவின் பிரதமராக வருவார் என்றும் திட்டங்களைத் தேடி மக்கள் சென்ற காலம் போய் திமுக ஆட்சியில் திட்டங்கள் மக்களைத் தேடிச் செல்கிறது என நெல்லை…

2024-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டும் நபர்தான் இந்தியாவின் பிரதமராக வருவார் என்றும் திட்டங்களைத் தேடி மக்கள் சென்ற காலம் போய் திமுக ஆட்சியில் திட்டங்கள் மக்களைத் தேடிச் செல்கிறது என நெல்லை மாவட்டம் விக்கரமசிங்கபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும் திமுக கொள்கைப்பரப்பு செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் விக்கரமசிங்கபுரத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 99- வது பிறந்தநாள் விழா, மற்றும் ஓராண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நகரச் செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாடநூல்களாகத் தலைவரும், திமுக கொள்கைப்பரப்பு செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில் மேடைப் பேச்சு மூலம் இந்த சமுதாயத்தைச் சீர்திருத்திய இயக்கம் திமுக, எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்சும் ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கிவிட்டதாகக் கூறிவருகிறார்கள், இவர்களின் நிலையைப் பார்த்த மக்கள் இருவரையும் ஓரம்கட்டிவிட்டனர். இனி திமுகதான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

அண்மைச் செய்தி: ‘டிடெக்டிவ் ஏஜென்சி பெயரில் நூதன முறையில் மோசடி; கூண்டோடு சிக்கியது எப்படி?’

ஆனால், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதாசீனம் செய்தார் 32 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தது, அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துத் தடுத்ததன் காரணமாக நாம் இன்று முக கவசம் அணியாமல் இருக்க முடிகிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி அமைப்பில் 21 மேயர் பதவி இடங்களில் 11 இடங்களைப் பெண்களுக்கு வழங்கி பெண்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர் மு.க.ஸ்டாலின். அதேபோல் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு உயர்படிப்புக்குச் செல்லும் போது மாதம் 1000 ஆயிரம் ரூபாய் வழங்கும் சிறப்பான திட்டத்தைத் தந்தது திமுகதான். அரசின் திட்டங்களைத் தேடி மக்கள் சென்ற காலங்கள் போய் திமுக ஆட்சியில் இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என மக்களை நோக்கி திட்டங்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும், இல்லம் தேடி கல்வி இந்தியாவிற்கே மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கும் திட்டமாக உள்ளது, தமிழ்நாட்டில் தற்போது பொற்கால ஆட்சி நடந்து வருகிறது . பாஜகவில் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள். முதலமைச்சரைப் பற்றிப் பேசுகிறார்கள் அவர் 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் மிக்கவர் உங்களின் அரசியல் கோணாங்கித்தனம் இங்கு எடுபடாது . டெல்லி செங்கோட்டை அருகிலேயே திராவிட கோட்டையை அமைத்துள்ளோம் 2024-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டும் நபர்தான் இந்தியாவின் பிரதமராக வருவார் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.