தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு மும்மொழிக் கொள்கையா?-கு.ராமகிருஷ்ணன் கேள்வி

தமிழக அரசுக்கு மட்டும் இரு மொழிக் கொள்கை தமிழக அரசின் வனத்துறைக்கு மட்டும் மும்மொழிக் கொள்கையா? என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…

தமிழக அரசுக்கு மட்டும் இரு மொழிக் கொள்கை தமிழக அரசின் வனத்துறைக்கு மட்டும் மும்மொழிக் கொள்கையா? என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு வனத் துறை, ஆனை மலை புலிகள் காப்பகத்தில் மனித, விலங்கு மோதலைத் தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோளாகவும், அறிவுரைகளாகவும் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை வனப்பகுதிகளில் மக்கள் வாழும் பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

அதிலுள்ள வாசகங்கள் தமிழிலும் இந்தி மொழியிலும் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கை ஏற்று நடைமுறை படுத்திக் கொண்டு இருக்கும்போது வனத் துறை ஹிந்தி மொழியில் சுவரொட்டி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு, முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து இருமொழி கொள்கையை பின்பற்றி வரும்போது வனத்துறை மட்டும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு வனத் துறை வெளியிட்டுள்ள ஹிந்தி சுவரொட்டிகளை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.