கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.9 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் 7 சதவீதமாக இருந்த எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் 7.9 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணக்கீட்டில் தெரிய வந்துள்ளது.
உலகெங்கிலும் பெரும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்று, அதனை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக பலரும் வேலை இழக்க நேர்ந்தது.
இதனால் கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்த வேலையின்மையின் விகிதம் படிப்படியாக உயர்ந்தது. கடந்த மே மாதம் முதல் கொரோனா எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதால் வேலையின்மையின் விகிதம் கணிசமாக குறைந்தது. தற்போது இந்தியாவில் ஒமிக்ரான் நோய் தொற்று பரவி அச்சுறுத்தி வருவதால், ஆங்காங்கே ஊரடங்குகள் அமல்படுத்தப்படுகிறது. இதனால், மீண்டும் வேலையின்மை விகிதம் உயர்ந்து வருகிறது. (கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.86% ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 7.91 % ஆக உயர்ந்துள்ளது)
கடந்த டிசம்பர் மாத கணக்கின் படி, இந்த வேலையின்மை பட்டியலில் 34.1 சதவிகிதத்துடன் ஹரியானா முதல் இடத்தில் உள்ளது. 27.1% பெற்று ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும், 17.3 % பெற்று ஜார்கண்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 1.4 சதவிகிதத்துடன் கர்நாடகா கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 6.9 % பெற்று தமிழ்நாடு 11ஆம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
https://unemploymentinindia.cmie.com/kommon/bin/sr.php?kall=wshowtab&tabno=0001
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்படுத்திய அதிர்வலைகளால் 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக தரவு வெளியானதும் குறிப்பிடத்தக்கது








