மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி வலியுறுத்தினார்
மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் தமிழக மாநில பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மின் கட்டண உயர்வால் யாருக்கும் பாதிப்பு இல்லை, யாரும் வருத்தப்பட வேண்டாம் என அமைச்சர் கூறுகிறார். மின்கட்டண உயர்வு 12 % இருந்து 51 % வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறுகின்ற மானியத்தை வைத்துக்கொண்டு மின்சார உற்பத்திக்கு செலவழிக்கவில்லை. வேறு எதற்கோ செலவழித்து விட்டு இந்த துறைக்கு கடன் வந்து விட்டது போல் கூறுகின்றார். மின்சார கட்டண உயர்வுக்கு கடந்த கால ஆட்சித்தான் காரணம். மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்தால் தான் உயர்த்தப்பட்டது என்று கூறுவது சிறுபிள்ளை தனமாக உள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் மின்கட்டணம் உயர்த்தப்படதாது என முதல்வர் வாக்குறுதி அளித்தார். தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி வகிக்கின்ற துறையில் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது.
சிமெண்ட், மணல், கம்பி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அறிவிக்கப்படாமலேயே திடீர் திடீரென வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.
விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் கடந்த கால ஆட்சி, மத்திய அரசை காரணம் காட்டி விலையை உயர்த்துகின்றனர் . மற்ற மாநிலங்களை விட மின்சார கட்டணம் குறைவு என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நியாயப்படுத்துகின்றார். மின்கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை, சொத்துவரியை குறைக்க வேண்டும் என்றார்








