குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, சுமார் 64 சதவீத வாக்குகளை திரௌபதி முர்மு பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வரும் 25ம் தேதியுடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் முடிவடைய உள்ளதையடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி அவருக்கு பிரிவு உபசார விருந்தளித்தார். இதில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
https://twitter.com/ANI/status/1550741356020002818
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக டெல்லி சென்ற அவருக்கு அதிமுக தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். இதையடுத்து குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.







