மத்தியபிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தூரில் உள்ள 56 சப்பன் துக்கான் FOOD STREET-ல் உள்ள உணவகங்கள் சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை அடுத்து டிசம்பர் 3-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜக இதுவரை 230 இடங்களில் 136 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் 144 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில், நாட்டிலேயே தூய்மையான நகரம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தூரின் 56 சப்பன் துக்கான் FOOD STREET-ஐ சேர்ந்த உணவக உரிமையாளர்கள் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 17-ஆம் தேதி காலை 9 மணிக்குள் வாக்காளர்கள் தாங்கள் வாக்கு செலுத்தியதற்கு அடையாளமாக கை விரலில் பூசப்பட்ட அழியா மையுடன் வந்தால், போஹா, ஜிலேபி அடங்கிய காம்போ இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காலை 9 மணிக்கு பிறகு வந்தால் இரண்டு உணவுகளுக்கு மட்டும் 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மையான நகரம் என்ற நாட்டிலேயே முதல் நகரமாக உள்ள இந்தூர், வாக்குப்பதிவிலும் முதல் நகரமாக தேர்வாக வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக 56 சப்பன் துக்கான் FOOD STREET-ஐ சேர்ந்த உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.







