பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 14 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளைக் கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் 15,18,150 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரைத் தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்கச் சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் படி ஒது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அண்மைச் செய்தி: ‘உயர்கல்வி உறுதித் திட்டம்; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்’
அதனடிப்படையில், குப்பைகள் கொட்டிய நபர்களிடமிருந்து 6.47 லட்சம் ரூபாயும், கட்டுமான கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து 7.71 லட்சம் ரூபாயும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களிடமிருந்து 99,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசு, மாநகராட்சி மற்றும் பொது இடங்களில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டியதாக 451 புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








