முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் இன்று சோதனை நடத்தினர்.
இந்தியா வர 269 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்ல் கடந்த மே மாதம், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தந்தை ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி, சென்னையில் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளில் இந்த சோதனைகள் நடைபெற்றன.
இந்நிலையில் இந்த சோதனையின் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 7 சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு இந்த சோதனையை நடத்தியது. கடந்த முறை இந்த வீட்டில் சோதனை நடத்தியபோது, பீரோ ஒன்றின் சாவி அப்போது லண்டனில் இருந்த கார்த்தி சிதம்பரத்திடம் இருந்ததாகவும், இதனால் அந்த பீரோவை திறக்காமல் சிபிஐ அதிகாரிகள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அந்த பீரோவை திறந்து சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.







