காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து காணாமல் போன 2 குழந்தைகளை வாலாஜாபாத் அருகே மீட்ட காவல்துறையினர், அவர்களை பெற்றோர்களின் ஒப்படைத்தனர். மேலும் குழந்தைகளைக் கடத்திய பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் 7 வயது மகள் சௌந்தர்யா மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் 3 வயது மகன் சக்திவேல் ஆகிய இருவரும் அவரவர் பெற்றோர்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுப் பிரிவில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர்களது உறவினரான காமாட்சி என்பவரை சந்திக்க வந்துள்ளனர். அப்போது குழந்தைகள் இருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர். கடந்த 8 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிரமாக குழந்தைகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிபுரம் அருகேயுள்ள அஞ்சூர் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் இரண்டு குழந்தைகளும் இருப்பதை அறிந்த, எஸ்பி சுதாகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று குழந்தைகள் இருவரையும் மீட்டு அவரவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இரு குழந்தைகளும் காணாமல் போனது தொடர்பாக புகாரைப் பெற்றவுடன் 10 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடினோம். அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிசிடி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அவ்விரு குழந்தைகளையும் ஒரு பெண் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அக்காட்சிகளின் அடிப்படையிலும், பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரிலும் அப்பெண் வாலாஜாபாத் ஒன்றியம் கன்னிகாபுரம் அருகேயுள்ள அஞ்சூர் என்பது தெரிய வந்தது. அங்கு சென்று பார்த்தபோது குழந்தைகள் இருவரும் கோழிப்பண்ணையில் இருந்தது தெரிய வந்தது. இருவரையும் மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
குழந்தைகளை மீட்பதில் தீவிர கவனம் செலுத்திய டிஎஸ்பி ஜூலியஸ்சீசர், ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன், பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் உதவியாக இருந்த பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்த குற்றச்சம்பவத்தில் குழந்தைகளை கடத்துவதற்கு லட்சுமி என்ற பெண்ணுக்கு உதவியாக இருந்த வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கடத்திய பெண் லட்சுமி என்பவரைத் தீவிரமாக தேடி வருகிறோம். அவரைக் கைது செய்தால்தான் என்ன காரணத்திற்காக அவர் குழந்தைகளை கடத்தினார் என்பது தெரிய வரும்.
இவ்வாறு எஸ்பி சுதாகர் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









