9 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் பெரு நிறுவனங்கள் வங்கியில் பெற்ற ரூ.14.5 லட்சம் கோடியை தள்ளுபடி செய்த நிலையில், சாதாரண மக்களிடம் இருந்து பல்வேறு சேவைகளை காரணம் காட்டி ரூ.35,000 கோடியை வசூல் செய்திருப்பதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிந்துள்ளது.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 11-வது தேசிய மாநாடு சென்னையில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு வளாகத்தில் அந்த அமைப்பின் இணை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த மாநாட்டில் 23 மாநிலங்களில் இருந்து பல வங்கிகளில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு தவறாக கையாண்டு வரும் நவ தாராளமய கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.
மக்களை மதரீதியில் பிளவு படுத்தும் பா.ஜ.கவின் மக்கள் விரோத கொள்கை குறித்து இதில் விவாதிக்க உள்ளோம். வங்கியை தனியார்மயமாக்குவது, கூட்டுறவு வங்கியை வணிகமயமாக்குவது, கிராம வங்கியின் 49% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் , வங்கிகளில் காலியாக உள்ள 5 லட்சம் காலியிடங்களை நிரப்ப கோரியும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் .
பா.ஜ.க ஆட்சி செய்த இந்த 9 ஆண்டுகளில் வங்கிகளில் பெரு நிறுவனங்கள் பெற்ற ரூ.14.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த பட்ச இருப்பு தொகை வைத்திருப்பது, ஏடிஎம் கட்டணம், குறுஞ்செய்தி சேவை போன்ற காரணங்களை சாதாரண ஏழை எளிய மக்களிடமிருந்து ரூ.35,000 கோடி வசூல் செய்துள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என பாஜகவினர் கூறினாலும், மக்கள் முன்னேறவில்லை. மக்களவையில் பிரதமர் நேற்று ஆற்றிய உரை ஏற்க தகும் வகையில் இல்லை. மணிப்பூர் மக்களிடையே பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. 9 ஆண்டுளாக பா.ஜ.க மக்களை பிளவுபடுத்தும் செயலை மட்டுமே செய்கிறது.
இவ்வாறு இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன இணை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா







