என்.எல்.சி நிர்வாகம் – தொழிலாளர்கள் இடையேயான பிரச்னை; மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் குறித்து மத்திய அரசும், என்.எல்.சி.யும், ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்.எல்.சி.யில் ஊதிய உயர்வு, பணி…

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்னைக்கு
தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் குறித்து மத்திய அரசும், என்.எல்.சி.யும்,
ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

என்.எல்.சி.யில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை
கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, என்.எல்.சி நிறுவனத்திற்கும்,
ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்ரமணியத்தை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து, முடிவெடுத்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எம்.தண்டபாணி, இது ஒரு தொடர் பிரச்னையாக உள்ளதால், என்.எல்.சி.நிர்வாகத்தின் நலனையும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு என்.எல்.சி. தரப்பில் 10, 15 பேர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்த விவரங்களை போலீசுக்கு அனுப்பும்படியும்,
நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பும் ஒப்புக்கொண்டால் தான் மத்தியஸ்தரை நியமிக்க முடியும் எனவும் கூறினார்.

ஒப்பந்தப் பணியாளர்களாக உள்ள அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டுமானால்
குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டி வரும். அது இயலாத காரியம் என என்.எல்.சி
தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, நெய்வேலியில் நிலக்கரி தீர்ந்து விட்டால் மக்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்பி விடுவர் என்றார்.

நீதிமன்றம் என்.எல்.சி.க்கு மட்டுமல்ல தொழிலாளர்களுக்கும் தான் எனவும்,
நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான என் எல்.சி.யை கைவிட முடியாது எனவும்
குறிப்பிட்ட நீதிபதி, 7 கோடி பேருக்கு ஒரு லட்சம் போலீசார் தான்
இருக்கின்றனர். அத்தனை பேரையும் என்.எல்.சி.க்கு அனுப்ப முடியாது என்றார்.

இதனை அடுத்து, மத்தியஸ்தர் நியமிக்க தொழிலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறிய நீதிபதி, மத்திய அரசும், என்.எல்.சி.யும் பதிலளிக்க ஆகஸ்ட் 22 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.