செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நரசிங்கராயன்பேட்டையில் துரைகண்ணு
என்பவர் நரிக்குறவர் சமுதாயத்துக்கு சொந்தமான பழமையான காளி சிலையை பராமரித்து வந்துள்ளார். இதனிடையே துரைகண்ணுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் கல்லடிகுப்பம் கிராமத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வரும் ஏழுமலை என்பவரிடம் சிலையை ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி ஆனந்த், அருள், சேகர், ஜெரினா, செல்வி உள்ளிட்ட 5 பேர் ஏழுமலையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பழமையான காளி சிலையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் திருடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் உள்ளது.
இதையும் படியுங்கள் : 6 மாத பயிற்சியை நிறைவு செய்த 631 காவலர்கள் – மார்ச் 1ம் தேதி உதவி ஆய்வாளர்களாக பொறுப்பேற்பு
இதனைத் தொடர்ந்து பெரியதச்சூர் போலீசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
- எம்.ஸ்ரீ மரகதம்







