தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அப்படி ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம் தான் ரெண்டகம். கத்தி, ரத்தம், பெரிய ஆக்ஷன், கொலை இப்படி எதுவுமே இல்லாத பக்காவான பாம்பே ரவுடிகளின் வாழ்க்கை தான் ரெண்டகம்.
மும்பையில் பெரிய தாதாவாக இருந்தவரின் வலது கரமாக செயல்பட்டவர் அரவிந்த்சாமி. ஆனால் ஒரு சண்டையின் போது பழைய நினைவுகளை எல்லாம் அவர் மறந்து விடுகிறார். அப்படி ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் அரவிந்த் சாமியிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைப் பற்றிய தகவல்களை பெற ஒரு கும்பல் குஞ்சாக்கோ போபனை அவரிடம் அனுப்புகிறது. அரவிந்த்சாமியுடன் நெருங்கி பழகிய குஞ்சாக்கோ போபன் அவரிடமிருந்து தகவலைப் பெற முயற்சிக்கிறார்.
அதன் பின் என்ன நடக்கிறது என்பது இந்த படத்தின் கதை. அரவிந்த்சாமி யார், குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப், இஷா ரெப்பா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஃபெல்லினி இப்படத்தை இயக்கியுள்ளார். அமைதியாக, சாந்தமாக, அப்பாவியாக அர்விந்த் சாமி இப்படத்தில் நடித்துள்ளார். தொடக்கம் முதல் இறுதி வரை காட்சிக்கு காட்சி நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் அரவிந்த் சாமி நடிப்பு சிலிக்க வைக்கிறது.
மலையாளத்தில் பல படங்களில் நடித்து முத்திரை பதித்த குஞ்சாக்கோ போபன் முதல் முறையாக தமிழில் கதாநாயகனாக நடித்துள்ளார். மிகவும் இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். குஞ்சாக்கோவின் காதலியாக ஈஷா ரெப்பா நடித்துள்ளார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதே போல சிறப்புத் தோற்றத்தில் ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார்.
அரவிந்ந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரைச் சுற்றியே கதை நகர்ந்தாலும் அடுத்தடுத்து பல திருப்பு முனைகளைத் தந்து ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர் பெல்லினி. பெரிய அளவில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும் கிளைமேக்ஸ் காட்சிகள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு இந்த படத்தின் கதையை இயக்குனர் உருவாக்கியுள்ளார். வரலாற்றின் பக்கங்களை திருப்பி பார்த்தால் அதில் பெரும்பாலும் துரோகங்கள் தான் அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதையை தான் இயக்குநரும் நேர்த்தியாக கொடுத்துள்ளார்.
சதி, துரோகம் அதற்கு பின்னால் உள்ள காரணம் என பலவற்றை இந்த படத்தில் இயக்குனர் சொல்ல முயற்சி செய்துள்ளார். முதல் பாகத்தை தொடர்ந்து அடுத்த பாகத்திற்கான தொடக்கத்தையும் இயக்குனர் கொடுத்துள்ளார். மொத்தத்தில் ஒரு பக்காவான கேங்ஸ்டர் படத்தை நிச்சயம் திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.
-தினேஷ் உதய்









