முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் கடிதம்: பரோல் வழங்குமாறு கோரிக்கை

மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் பரோல் வழங்குமாறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் விதியை தளர்த்தி தனக்கு விடுப்பு வழங்குமாறு பயஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு தண்டனை தள்ளிவைப்பு விதிகள் – விதி எண்: 40-இன் படி விதிகளை தளர்த்தி மாநில அரசின் அதிகாரத்தின்படி மருத்துவ சிகிச்சைக்கா, 30 நாட்கள் சிறை விடுப்பு தந்து உதவுமாறு பணிவுடன் மனு.

ஐயா! வணக்கம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பெயரில் பிணைக்கப்பட்டு, குடும்பத்தையும், உறவுகளையும் பிரிந்து கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அனுபவித்து வரும் கொடுஞ்சிறைவாசத்தை தாங்கள் நன்றாக அறிவீர்கள். கர்ப்பிணியாக இருந்த எனது மனைவியோடு தாய்தமிழகத்தை நம்பி வந்து எனது வாழ்வை தொடங்க முற்படுகிறபோதே மிகப் பெரும் கொலைப்பழி சுமத்தப்பட்டு, சிறைபடுத்தப்பட்டதால் என் வாழ்நாளின் முக்கால்வாசியை சிறைக்குள்ளேயே கழித்துவிட்டேன்.

பொருள் தேடவும், கழிக்க வேண்டியதுமான அரிய இளமைக் காலத்தை முற்றாக இழந்துவிட்டேன். நான் சிறைபடும்போது 3 மாத கைக்குழந்தையாக இருந்த எனது மகனுக்கு இன்றைக்கு திருமணம் நடந்து எனது பேரனும் பிறந்துவிட்டான். இன்னமும் நான் சிறை கொட்டடிக்குள்ளேயே கிடக்கிறேன். திருமணமான சில காலத்திலேயே மிசாவில் அநீதியாக சிறைபடுத்தப்பட்டு, வதைப்பட்ட தாங்கள் சிறை தரும் கொடும் வலிகளை நன்றாக உணர்வீர்கள் என நம்புகிறேன்.

எங்கள் எழுவரின் விடுதலைக்காக, தமிழக அமைச்சரவையானது அரசியலமைப்புச் சட்டம் 161-இன் படி, 09.09.2018 அன்று இயற்றியத் தீர்மானத்தை, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி, கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் தார்மீகக் கடமையென கூறி, எனது நண்பன் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கும் நிலையிலும் ஆளுநர் இன்றளவும் ஒப்புதல் தர மறுத்து வருவது வேதனையளிக்கிறது.

31 ஆண்டுகள் எனும் மிக மிக நீண்ட சிறை காலத்திலும், விசாரணை காலத்தில் நான் அனுபவித்த கொடுமையான சித்ரவதைகளின் தாக்கத்தினாலும் எனது உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கென அவ்வப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் போதிலும், என்னால் அவற்றில் இருந்து முழுமையாக இன்னமும் மீள முடியவில்லை.
இதனால், ஒவ்வொரு நாளையும் பெரும் சிரமங்களோடே கடக்கிறேன். வலியோடு தினம் தினம் அவதிப்படுகிறேன்.

இத்தனை ஆண்டுகளாக என்னைப் பிரிந்து தவிக்கும் எனது மனைவி பிரேமாவும் முதுமையினால் உடல்நலமின்றி வாடி வருகிறார். ஆகவே என் மனைவிக்கும், எனக்கும் உடல்நலக் குறைபாட்டுக்குத் தொடர் சிகிச்சை வேண்டி இருப்பதால், மருத்துவ சிகிச்சைக்காக மாநில அரசின் அதிகாரத்துக்குள்பட்ட விதி எண் 40-இன் படி விதிகளை தளர்த்தி 30 நாட்கள் விடுப்பு வழங்கி உதவுமாறு பணிவுடன் கோருகிறேன்.

சிறையிலிருந்த இவ்வளவு நீண்ட நெடிய காலத்தில் எனது நன்னடத்தையை உறுதி செய்திருக்கிறேன். ஏற்கனவே எனது மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக ஒரு மாத காலம் சிறைவிடுப்பு பெற்று வெளியே வந்து, எனது வழக்கறிஞர் சந்திரசேகரன் இல்லத்தில் தங்கியிருந்தபோது அரசின் விதிகளை சரிவர பின்பற்றி இருக்கிறேன். ஆகவே, மருத்துவ சிகிச்சைக்காக எனக்கு விடுப்பு வழங்கப்படும் பட்சத்தில், அரசின் விதிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றுவேன் என உறுதி கூறுகிறேன் என்று அந்த கடிதத்தில் ராபர்ட் பயஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் – 6 பேர் மீது போக்சோ வழக்கு

Web Editor

15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதும் குற்றமே: பிரான்ஸ் அரசு

எல்.ரேணுகாதேவி

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,578 பேருக்கு கொரோனா

G SaravanaKumar