பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், தமிழ்நாடு உற்பத்தி ஆலையில் 10 லட்சமாவது யூனிட்டை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ரெனால்ட். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக டஸ்டர் காரையும், இந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது. தற்போது டஸ்டர் காரின் புதிய மாடலை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ரெனால்ட் நிறுவனம் தயாராகி கொண்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சென்னை ஒரகடத்தில் ரெனால்ட் எஸ்.ஏ.எஸ் பிரான்ஸ் என்ற பெயரில் அமைந்துள்ளது. இதற்கிடையே ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்து ஒரு புதிய மைல்கல்லை தற்போது கடந்துள்ளது.
இதுகுறித்து, ரெனால்ட் இந்தியா ஆபரேஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான வெங்கட்ராம் தெரிவித்ததாவது:
“ரெனால்ட் நிறுவனம் ஆண்டுக்கு 4.80 லட்சம் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது ஒன்பது லட்சம் வாடிக்கையாளர்கள் எங்களிடம் உள்ளனர். இந்நிலையில், நேற்று வரை 10 லட்சம் யூனிட் காரை உற்பத்தி செய்துள்ளோம். ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது இந்திய சந்தை மீதான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது
அசெம்பிளி லைனிலிருந்து 10 லட்சமாவது ரோல் அவுட்டைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிற ‘கிகர்’ காரை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முறைப்படி கொடியசைத்து விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, ரெனால்ட் இந்தியா மூன்று பயணிகள் காரான க்விட், கிகர் மற்றும் ட்ரைபர் காரை ஆசிய பசிபிக், தெற்காசிய பகுதி ஒத்துழைப்பு சங்கம், தென்னாப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிகள் உள்பட 14 நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.







