சிவகார்த்திகேயனுக்காக மாவீரன் படத்தில் நான் எந்த காட்சிகளும் மாற்றவில்லை என இயக்குனர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்தது. இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் மடோன் அஸ்வின் ஒரு நேர்காணலில், “சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நான் எழுதிய கதாபாத்திரத்தில் பொருந்திப் போனார். அவருக்காக எந்த காட்சிகளும் மாற்றவில்லை. அவரும் எதையும் மாற்ற வேண்டுமென கூறவில்லை. படத்தில் அவர் நகைச்சுவை பண்ணவில்லை. அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டுமே காமெடி பண்ணுவார்கள். ஆனால் சின்ன சின்ன ஆலோசனைகளை கொடுத்தார். அது படத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஸ்கிரிப்ட் பற்றி அறிவுள்ள ஆளாகத்தான் சிவகார்த்திகேயன் உள்ளார்” என கூறினார்.







