வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட சில்வர் பாத்திரத்தை தீயணைப்பு துறையினர் குழந்தைக்கு காயம் ஏற்படாத வகையில் பத்திரமாக அகற்றினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள விசாலாட்சி நகர் பகுதியை
சேர்ந்தவர் ஜோனத். இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் . இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சில்வர் பாத்திரம் தலையில் மாட்டிக்கொண்டது. இந்நிலையில் ஜோவித்தின் பெற்றோர் அவனை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஒன்றரை வயது குழந்தையான ஜோவித்தின் தலையில் மாட்டிக்கொண்டிருந்த சில்வர் பாத்திரத்தை, குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெட்டி எடுத்தனர்.
பின்னர் குழந்தைக்கு முதலுதவி கொடுத்து, பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.







