மநீம தலைவர் கமல்ஹாசன் செய்திருப்பது தியாகம் தான் – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு……..!

மநீம தலைவர் கமல்ஹாசன் செய்துள்ளது தியாகம் தான் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். மேலும்  இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல;பொறுமை என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கமல்ஹாசன் செய்துள்ளது தியாகம் தான் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள் எக்ஸ் பதிவில்,

அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும்  மநீம தலைவருமான திரு. கமல்ஹாசன்  அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.

இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். “இது தியாகம் அல்ல, கடமை” என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிடமாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்”  என்று தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.