தமிழகத்தில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல், பாஜகவிற்கு கடைசித் தேர்தலாக அமையும். தமிழகத்தில் பாஜக என்ற அமைப்பு தேவையில்லை என்ற அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை சிவானந்த காலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற மணிவிழா நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”கலைஞர் முதல் தற்போது முதல்வர் ஸ்டாலின் வரை திமுகவிற்கு பற்றோடும் பாசத்தோடும் நெருக்கத்தோடும் உற்ற துணையாக முதல்வருக்கு அரணாக இருப்பவர் திருமாவளவன். வயது வெறும் எண் மட்டும்தான், 18 வயதுடையவர் போன்று ஒடிக்கொண்டு இருப்பவர் அண்ணன் திருமாவளவன். தாடி மட்டும் தான் வெளுத்துள்ளது. 60 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரையாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறார்.
தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம் அடுத்தது நாங்கள்தான்
என்கிறார்கள். சமூக வலைதளங்களை மட்டும் நம்பி, வெற்று விளம்பரங்கள் செய்து அவதூறு பரப்பி வருகிறார்கள். சமூக வலைதளங்கள் எல்லாம் ஓட்டாக மாறாது. ஓட்டு வேண்டும் என்றால் உழைக்க வேண்டும். திருமாவளவன் போல முதல்வர் ஸ்டாலின் போல உழைக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை ஒன்றியத்தில் இருப்பவர்கள், தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வாக்குறுதிகளாக வழங்கி வருகின்றனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 / 40 நாம் வெற்றி பெறுவோம். நீலகிரி, பொள்ளாச்சி, கோவை நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்கள் தான் வெற்றி
பெறுவார்கள். திருமாவின் சொல்லும் செயலும் நூறு ஆண்டுகாலம் கடந்தும் நிமிர்ந்து நிற்கும். சனாதனத்தோடு என்றும் சமரசம் இல்லை என்ற கொள்கையோடு வாழ்பவர் திருமாவளவன். அவர் அரசியல் பணிக்காக அரசுப் பணியை வேண்டாம் என்றவர். அரசு பணியில் இருந்தால் இப்போது ஒய்வு பெற்றிருப்பார். ஆனால் அரசியல் பணிக்காக அவரையே தியாகம் செய்தவர். திருமாவளவன், எழுத்தாளர், நடிகர், அரசு ஊழியர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் என பன்முகங்கள் கொண்டவர்.
தமிழகத்தில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல், பாஜகவிற்கு கடைசித் தேர்தலாக அமையும். தமிழகத்தில் பாஜக என்ற அமைப்பு தேவையில்லை என்ற அளவில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.







