திமுக துணைப்பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்ட பிறகு பேசிய கனிமொழி எம்.பி., அப்பா இல்லாத இடத்தில் அண்ணன் மு.க.ஸ்டாலினை வைத்து பார்ப்பதாக உருக்கமாக தெரிவித்தார்.
திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் 2-வது முறையாக போட்டியின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதேபோல், துணைப்பொதுச்செயலாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவிக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய கனிமொழி எம்.பி, அண்ணா, கருணாநிதி ஏற்றிருந்த பொறுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக ஏற்று கொண்டு நம்மை வழிநடத்துகிறார் என கூறினார். எந்த நேரத்திலும் கருணாநிதி தனது கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன் என தனது வாழ்நாள் முழுவதும் இருந்தார் என குறிப்பிட்டார். அதேபோல் பெரியார், அண்ணா கனவுகளையும் அவர் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றி காட்டினார்.
கருணாநிதிக்கு பிறகு திமுகவில் வெற்றிடம் உருவாகியிருப்பதாக பலபேர் விமர்சித்தனர். பரம்பரை பகைவர்கள் இதனை பயன்படுத்தி சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைத்தனர். ஆனால், வெற்றிடத்தில் காற்று போல் இல்லாமல், ஆழிப்பேரலையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று அதனை சாதித்து காட்டினார் என புகழாரம் சூட்டினார்.
கருணாநிதியை போன்று எந்த நேரத்திலும் தனது கொள்கையை விட்டு கொடுக்காமல் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றார். பெண்களுக்கு சம உரிமையை திமுக ஆட்சி வழங்கி வருகிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து மீண்டும் பெண்களை வீட்டில் முடக்கும் செயல் நமக்கு எதிராக நடைபெறுவதால் அதனை முறியடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் அப்பா இல்லாத இடத்தில் உங்களை (மு.க.ஸ்டாலினை) வைத்து பார்க்கிறேன் என உருக்கமாக பேசிய கனிமொழி எம்.பி., நீங்கள் தேர்ந்தெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் அணிவகுத்து பின்னால் நிற்பேன் என தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்