சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகாலில் விதிகளுக்கு புறம்பாக கழிவுநீரை வெளியேற்றி வந்த ஆயிரத்து 683 இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 2 ஆயிரத்து 499 கழிவுநீர் இணைப்புகள் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இதனை மாநகராட்சி உதவி / இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்,சுகாதார ஆய்வாளர், கழிவுநீர் அகற்றல் வாரிய உதவி பொறியாளர் கொண்ட குழு ஆய்வு செய்து வந்தது. அப்போது சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட மழைநீர் வடிகால்களை அதிகாரிகள் கொண்ட குழு எச்சரித்ததோடு அவர்களுக்கு அபராதமும் விதித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், சாதாரண கட்டிடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு அபராதமாக 5 ஆயிரம் ரூபாயும்,வணிக வளாகங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும்,சிறப்பு கட்டிடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும்,வணிக வளாகங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும்,அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 1 லட்சம் ரூபாயும், வணிக வளாகங்களுக்கு 2 லட்சம் ரூபாயும் மாநகராட்சி சார்பில் அபராதம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மழைநீர் வடிகாலில் விதிகளுக்கு புறம்பாக கழிவுநீரை வெளியேற்றி வந்த ஆயிரத்து 683 இணைப்புகளை அகற்றி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மொத்தம் 10.65 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்று சட்டவிரோதமாக மற்றும் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் கட்டடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.