வெளிநாடுவாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பணம் 100 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாடு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கடந்த 8ம் தேதி முதல் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று நடைபெற்ற கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாடு வாழ் இந்தியர்களே நாட்டின் உண்மையான தூதர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அவர்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலமாக இந்திய பொருள்களும், சேவைகளும் சர்வதேச அளவில் பிரபலமடையும்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன. சீனா, ஐரோப்பி ஒன்றிய நாடுகள் தவிர இந்தியாவிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான பெரும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்தியாவில் செயல்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செயல்பட வேண்டும்.
அதன்மூலமாக வெளிநாடுவாழ் இந்தியர்களின் தொழில்முனைவுத் திறன் மேம்படுவதோடு, சுதந்திர நூற்றாண்டு கொண்டாடப்படவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி காணும். வெளிநாடுவாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பணம் சுமார் ரூ.8 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம்.
கொரோனா தொற்று பரவலால் தாயகம் திரும்பிய இந்தியத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பமாட்டர்கள் என உலகம் எதிர்பார்த்த நிலையில், ஒரே ஆண்டுக்குள் அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். அது மட்டுமல்லாமல் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம், எண்ம தொழில்நுட்பம், வாகனப் போக்குவரத்து, குறைக்கடத்தி வடிவமைப்பு, மருந்து பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். உலகின் அறிவாற்றல் மையமாக இந்தியா மாறி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் கட்டமைப்பு, முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது என்று கூறினார்.